பரண் மேல் ஒரு கடிகாரம்

ஜூன் 7,2017








எப்பொழுதும் மக்கள் கூட்டமாக திரியும் பஜார் சாலை சற்று வெறிச்சோடிக் அன்று ஞாயிற்றுக்கிழமை கிழமை என்பதை சொல்லாமல் சொல்லியது. அது பங்குனி மாதமாதலால் மாரியம்மன் கோவில் திருவிழா கலை ஊரெங்கும் தெரிந்தது.கோவிலுக்கு வரும் பெண்கள் குழு குழுவாக சென்றுகொண்டிருந்தனர்.அவர்கள் கைகளில் மஞ்சள் நீரால் நிறைந்த வெண்கல செம்புகள் இருந்தன.சில சிறு வயது பெண்கள் அவர்களுக்கேற்றவாறு பிளாஸ்டிக் குடங்களில் வேப்பிலையை மிதக்கவிட்டுச் சென்றனர்.ஆங்காங்கே ‘’ ஆஹோ அய்யாஹோ ‘’ கரகோஷமும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.நான் ரோஜா பீடி ஸ்டோர்ஸ்க்கு அடுத்து இருந்த இமயன் வாட்ச் கடை வாசலில் நின்றுகொண்டிருந்தேன்.இன்று ஏன் இன்னமும் கடை திறக்கப்படவில்லை என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன்.எப்படியும் ஒன்பது முப்பதுக்குள் கடைக்காரர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒன்பது முப்பது ஆக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கிறது என்பதை ரோஜா பீடி ஸ்டோர்ஸில் கேட்டு தெரிந்துகொண்டேன்.இந்நேரம் என்னிடம் மட்டும் வாட்ச் இருந்தால்,ரோஜா பீடி ஸ்டோர்ஸிடம் என்ன யாரிடமும் மணி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.மாறாக என்னிடம் தான் எல்லோரும் மணி கேட்டு செல்வார்கள்.

 

அப்பாவிடம் கடந்த ஆறு மாதமாக வாட்ச் கேட்டுகொண்டிருக்கிறேன்.அவர் வங்கி தருவதாய் கூறி காலத்தை கடத்தியது தான் மிச்சம்.அந்த வாட்ச் இருநூற்று நாற்பது ரூபாய்.நான் தினமும் பஜாரை கடந்து பள்ளிக்கு செல்கையில் பார்ப்பேன்.கடைக்கார அண்ணாச்சி வட்டமாக சிறியதாக உள்ள பூதக்கண்ணாடியை கண்ணில் வைத்துகொண்டு,கையில் உள்ள வாட்சில் எதையோ பார்த்துகொண்டிருப்பார்.அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு முன்னால் உள்ள ஷோகேஷ் முன் புறம் கண்ணாடியாக இருக்கும்.அதில் தான் அந்த வாட்ச் இரண்டாவது வரிசையில் நான்காவதாக இருந்தது.ஒரு முறை சனிக்கிழமை மதியமே பள்ளி முடிந்துவிட்டது.நானும் ஐயப்பனும் வீட்டிற்கு நடந்துப் போய்கொண்டிருந்தோம்.அப்போது கடை முன்னால் நின்று ஐயப்பனுக்கு அந்த வாட்சை காண்பித்தேன்.ஐயப்பனுக்கும் அந்த வாட்ச் பிடித்திருந்தது.நானும் அவனும் கடைக்கார அண்ணாச்சியிடம் அதன் விலையை கேட்டோம்.அவர் ஒரே போடாக இருநூற்றி நாற்பது என்று சொல்லிவிட்டார்.விலை அதிகம் தான் என்றாலும் அதை வாங்க வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது.அதற்காக தினமும் அப்பா கொடுக்கும் இரண்டு ரூபாயை சேகரித்து இருநூற்றி முப்பது ரூபாய் சேகரித்து விட்டேன்.இடையில் ஒரு முறை பரீட்சை வந்தது நல்லதாகப் போயிற்று. முதல் முறையாக நான் பரீட்சை வந்ததற்காக சந்தோசப்பட்டுக் கொண்டேன்.பரீட்சை நாட்களில் அப்பா தினமும் ஐந்து ரூபாய் கொடுப்பார்.செலவுக்கு இரண்டு ரூபாய்.பரீட்சைக்கு பேப்பர்,கிராப்,மேப் வாங்க மூன்று ரூபாய்.வாட்ச் வாங்குவதற்கு ஆசைப்பட்டு மூன்று ரூபாய்க்கு வாங்க வேண்டிய பேப்பரை மிச்சம் பிடித்தேன்.ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு பேப்பர் வாங்கி விட்டு மீதி ஒரு ரூபாய் ஐம்பது பைசாவை ஐந்து நாட்களுக்கு சேகரித்தேன்.அப்படி பரீட்சை பேப்பரை மிச்சப்படுத்தி பரீட்சை எழுதியதால், சமூக அறிவியலில் பெயிலாகி விட்டேன்.பெயில் ஆகியதற்காக  எனக்கு வீட்டில் பலத்த வரவேற்பு வேறு.ப்பா... காதில் ரத்தம் வரும் அளவிற்கு திட்டும்,அறிவுரையும்.ஒரு வழியாக இந்த இருநூற்று நாற்பது ரூபாயை சேர்ப்பதற்கு எனக்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.எப்படியாது அந்த வாட்சை வாங்கி விட்டால் போதும் என்று இருந்தது.

 

நான் வாட்ச் வாங்குவதற்கு முக்கிய காரணம் சாமிநாதன்.அவன் ஒரு கருப்பு நிற வாட்ச் கட்டியிருப்பான்.அதை வைத்துக் கொண்டு அவன் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை.அவனிடம் வாட்சில் மணி கேட்பதற்காகவே சிலர் பேசுவர்.பி கிளாஸ் சந்தியா ஒரு முறை அவன் வாட்சில் லைட் எரிவதை ஆச்சிரியமாக பார்த்ததை நானே பார்த்தேன்.அவன் கட்டியிருக்கும் வாட்சை விட நான் வாங்கும் வாட்ச் இன்னம் நன்றாக இருக்கும்.அந்த வாட்சின் இடது பக்க மேல் பட்டனை அழுத்தினால் குதிரையும்,மானும் ஓடும்.இந்த வாட்சை நான் வாங்குவதற்காக நான்கு மாதங்களுக்கு தின்படங்களை நான் தியாகம் செய்ய வேண்டியிருந்தது.ஐயப்பன் தான் அவன் வாங்குவதில் அவ்வப்பொழுது சிறிது தருவான்.பிரதர் கடை பழரசம், கேண்டீன் சக்கர அப்பளம்,குண்டண்ணன் கடை டியூப் ஐஸ் என இவற்றின் வாசம் நாசியை பதம் பார்க்கும்.இருந்தாலும் நான் என்னை கட்டுபடுத்திக்கொண்டு போய்விடுவேன்.

 

 

கடைக்கார அண்ணாச்சி சைக்கிளை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார்.எதுவும் கேட்கவில்லை.பேண்டில் இருந்த கொத்துச் சாவியை எடுத்துப் பூட்டை திறந்தார்.ரோலிங் ஷட்டர் மேலேறும் சப்தம் சின்னதாக எரிச்சலூட்டிச் சென்றது.நான் கடைக்குள் நுழைந்தேன்.கடை முழுதும் சுவர்க் கடிகாரங்களும்,கைக்கடிகாரங்களுமாய் இருந்தன.

 

‘’ என்னப்பா தம்பி ? ‘’ அண்ணாச்சி கனத்த குரலில் கேட்டார்.

‘’ இந்த ப்ளூ கலர் வாட்ச் வேணும் ‘’ வாட்சை காடிகொண்டே கேட்டேன்.

‘’ நீ மட்டும் வந்துருக்க.பெரியவங்க யாரும் வரலையா ? ’’ என வாட்சை எடுத்துக்கொண்டே கேட்டார்.

‘’ இல்ல ‘’ பயத்தோடு சொன்னேன்.

    வாட்சை கையில் எடுத்தவர் சரியான நேரத்தை அமைத்து கொடுத்தார்.நான் பையில் இருந்த சில்லறையை எடுத்துக் கொடுத்தேன்.

‘’ சேத்து வச்சியா ? ‘’

‘’ ம்ம் ‘’

 

                அவர் ஐந்து ஐந்து இரண்டு ரூபாய் நாணயங்களாய் எண்ணினார்.நான் எதிர்பார்த்ததைவிட வேகமாக எண்ணினார்.சில்லறை சரியாக இருக்கிறது என்றவுடன் அங்கிருந்து நகர்ந்தேன்.கையில் வாட்சை கட்டிப் பார்த்தேன்.என் கரு நிற தேகத்துக்கு ப்ளூ கலர் எடுப்பாய் தெரிந்தது.இடது பக்கம் மேலிருக்கும் பட்டனை அழுத்தினேன்.மஞ்சள்,சிவப்பு நிற லைட்டுகளோடு நேரத்திற்கு மேலாக சிறிதாக குதிரையும்,மானும் ஓடியது.இதை சாமிநாதனிடம் காட்டவேண்டும்.அவன் எப்படியும் சந்தியாவிடம் சொல்லுவான்.சந்தியா என்னிடம் மணி கேட்பாள்.இது போக ஒவ்வொரு பீரியட் முடியும் போது மற்ற மாணவர்கள் என்னிடம் மணி கேட்பார்கள்.எனக்கு நினைக்கும் போதே பெருமையாக இருந்தது.உலகமே என்னையும் என் வாட்சையும் பார்த்துக்கொண்டு இருப்பதாக தோன்றியது. நேராக முதலில் வீட்டிற்கு போக வேண்டும்.அம்மா வேறு தேடிக் கொண்டிருப்பாள்.வீட்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் போது தான் அப்பாவின் ஞாபகம் வந்தது.அப்பா வாட்ச் எப்படி வந்தது ? என கேட்டால் என்ன சொல்வது.சேர்த்து வைத்து வாங்கினேன் என்று சொன்னாலும் திட்டுவார்.என்னிடம் கேட்காமல் ஏன் வாங்கினாய் என்று கடிந்துக் கொள்வார். போன வருடம் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது பபிள்காம் வாசம் வீசும் பேனாவை ஐந்து ரூபாவிற்கு வாங்கியதற்கே பயங்கரமாக திட்டிவிட்டார்.இந்த முறை இருநூற்றி நாற்பது ரூபாய் வாட்ச். தோலை உரித்துவிடுவார் என்ற பயம் இதய ஓட்டத்தை அதிகரிக்க செய்தது.வாட்சை கழட்டி டவுசர் பையில் போட்டுக் கொண்டேன்.வீட்டிற்கு சென்றதும் புத்தகப்பையில் ஒளித்துவைத்துக்கொண்டேன். தினமும் பள்ளிக்கு போன பின் வகுப்பில் ஆரம்பிக்கும் போது கட்டிகொள்வேன்.மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு போகும் போது மீண்டும் பையினுள்ளே வைத்துவிடுவேன்.ஒரே ஒரு நாள் மட்டும் ஐயப்பன் கேட்டான் என்று இரவல் கொடுத்தேன்.

 

 நான் எதிர்பார்த்தது போலவே சந்தியா என் வாட்சில் லைட் அமுக்கி பார்த்து மான் ஓடுவதை பார்த்து சிரித்தாள்.’’ நீ கூட புள்ளிமான் மாதிரி தான் இருக்க ’’ என சொல்லவேண்டும் போல் இருந்தது.ஆனால் சொல்லவில்லை.அவள் இப்போதெல்லாம் என்னிடம் அடிக்கடி பேசுகிறாள்.சாமிநாதனுக்கு பொறாமை பொங்கியிருக்கும்.அவன் என்னிடம் எந்த கடையில் வாங்கினாய் என்று விசாரித்தான்.ஒரு வேளை அவன் இதை விட நல்ல வாட்ச் வாங்கினாலும் வாங்கிவிடுவானோ என்ற பயம் சுழன்றுகொண்டே இருந்தது.அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது அம்மா எனக்காக பள்ளி வாசலில் காத்துக்கொண்டிருந்தாள்.அவள் கோவிலுக்கு போய்விட்டு என்னை அழைத்துப் போக வந்திருக்கிறாள்.அம்மா இது போன்று என்றாவது ஒரு நாள் திடீரென்று தான் வருவாள்.வாட்சை மறைத்துக் கொண்டே வீட்டிற்கு வருவதற்குள் எனக்கு போது போதும் என்றாகிவிட்டது.இப்படி பயந்து பயந்து வாட்சை கட்டிகொள்வது எனக்கு வெறுப்பாக இருந்தது.அடுத்த வருடம் எட்டாம் வகுப்புக்கு பெரிய பள்ளிக்கூடம் போகும் போது அப்பாவிடம் சொல்லிவிட என்று எண்ணினேன்.அவர் என்ன சொன்னாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சலும் எனக்குள் ஒட்டிக்கொண்டது.அம்மா வெளியில் போகும் வரை காத்திருந்து,அம்மா போன பின் டவுசர் பாக்கெட்டில் இருந்த வாட்சை எடுத்தேன்.எங்கு ஒளித்து வைக்கலாம் என பாதுகாப்பான இடம் தேடினேன்.கடைசியாக பரணின் மேல் இருந்த பழைய பாத்திரம் ஒன்றை தூக்கி அதனுள் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தேன்

 

."அங்க என்னடா பண்ற" அப்பாவின் அரட்டல் சத்தம் கேட்டு வாட்ச்சை கீழே விட்டுவிட்டேன்.அப்பா கீழே விழுந்த வாட்ச்சை கூர்மையாக கவனித்தார்.

 

"ஏதுடா இது எங்க இருந்துடா திருடிட்டு வந்த" என அப்பா என்னை அடிக்க ஆரம்பித்தார்.

 

என் அலறல் சத்தம் கேட்டு அம்மா ஓடி வந்தாள்.

 

" அடியே உன் புள்ள எங்க இருந்தோ வாட்ச திருடிட்டு வந்துருக்காண்டி.எல்லாம் உன் வளப்பு தாண்டி.உன்ன தாண்டி அடிக்கனும்." இப்போது அம்மா எகிறிக் கொள்ள ஆரம்பித்தாள். " சும்மா என்னையே சொல்லாதீங்க.ஏன்,அவன் உங்களுக்கு புள்ள இல்லையா? "  

 

அவர்கள் வாதம் இன்னும் முடியவில்லை.முடிந்தாலும் அந்த வாட்ச் எனக்கு கிடைக்கப் போவதில்லை.கொடுத்து வைத்தவை என் வீட்டு குப்பைத் தொட்டி.உடைந்த வாட்சின் சில்லுகளாது அதற்கு கிடைக்கும்.அம்மா அப்பாவின் பலமான சண்டை சப்தத்திற்கு நடுவே என் மனதில் மெல்லிய வலி உண்டானது.வாட்ச் இல்லாத என்னிடம் இனி சந்தியா பேசுவாளா என்று.    

 

 

Comments

Popular Posts