கினி எலி (Guinea pig)

ஜூன் 4,2017

                          என்னதான்வேலை,படிப்பிற்காக  ஆபீஸ்,கல்லூரி என நேரமின்றி அவசரஅவசரமாக  ஓடினாலும் இந்த அவசர யுகத்தின் மனஉளைச்சலில் இருந்து விடுபட,சில மணிநேரமாவது  ஏதேனும் ஒரு விஷயத்தில் செயல்பட வேண்டியிருக்கும்.இதில் சிலர் புத்தகம் வாசிப்பது,இசையை ரசிப்பது,இன்னும் சிலர் தனிமையில் இருப்பது என இருப்பர்.ஆனால் மனஉளைச்சலை தவிர்க்க பலரும் தேர்ந்தெடுப்பது "செல்லப்பிராணி வளர்ப்பு".எங்காவது சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அவை நம்மை வரவேற்கும் அழகே தனி.கிளிகள்,லவ்பேர்ட்ஸ்,காக்டெயில்,ஃபின்செஸ் என நிறைய வளர்த்தாலும் என்றும் என்னுடைய ஃபேவரைட் கினிபிக் தான். கினிபிக் வளர்ப்பைப் பற்றி சொல்லும் முன் கினிபிக்கைப் பற்றி சொல்வது நலம்.     

                   "
கினிபிக்கா அப்பிடினா என்னதுடா??" என பலரும் என்னிடம் கேட்ட கேள்வி இது.சற்று பெரிய தலை,பருத்த உடல்,வாலுக்கான அடையாளம் இன்றி காணப்படும் மொட்டையான பின்புறம்.கருப்பு,வெள்ளை மற்றும் மண் நிறத்தில் தனித்தோ அல்லது கலந்தோ இருக்கிறது.கினிபிக் தோற்றத்தில் எலியும் முயலும் கலந்த கலவையாக இருப்பது போல் தோன்றினாலும் இவை ஒரு தனி உயிரினம் தான்.ஆனால் அளவில் பெருச்சாளி போல்  இருப்பதால், ஆரம்பத்தில் நிறைய பேரின் கேலிக்கு  ஆளானேன்.வறண்ட பூமியில் வாரங்கால் வெட்டுமளவிற்கு மேகம் கருக்கும் போது,எந்தளவிற்கு மகிழ்வும்,கொண்டாட்டமும் நிலைத்திருக்குமோ,அந்தளவிற்கு என் மனமும் கொண்டாட்டத்தில் திளைத்திருந்தது.கினி எலிகள் வாங்குவதற்காக மதுரைக்கு செல்ல தயாராகி வாசலில் வந்து நின்றபோது,எதிரே இருந்த நான்கு மாமிகளின் வீட்டிலும் மட்டன் மணந்துகொண்டிருந்தது.எப்படி உப்பில்லாமல் ஊறுகாய் இல்லையோ,அதை போல மட்டன் இன்றி ரம்ஜான் இல்லை.ஒன்றரை மணி நேரத்தில் சிம்மக்கல்லின் ஞாயிறு சந்தையை அடைந்திருந்தோம்.ஒரு பெரிய கூண்டு நிறைய கினிபிக்கள் ஓட இடமின்றி அசைவின்றி நின்றுகொண்டிருந்தது.அங்கும் மக்கள்தொகை அதிகம் தான் போல.ஒரே ஹவுஸ்புல் ஆக இருந்தது.எந்த கினிபிக்கை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தோம்.சிறிது நேரத்தில் குழப்பத்தையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு மனதை கவர்ந்த,எங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக தெரிந்த கினிபிக்கை தேர்ந்தெடுத்தோம்.கட்டைபையில் செல்லங்களை போட்டுக்கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்தோம்.என் கையில் இருக்கும் பையில் நான்கு கிலோ தங்கத்தை சுமந்துகொண்டு செல்வது போன்று எனக்குள் ஒரு மகிழ்வு.வாள் தூக்கி வந்து கோட்டையை வென்றதை போன்றதொரு பெருமிதம் எங்கள் கண்களில் இருந்ததை உறுதியாக யாரும் கவனித்திருக்க மாட்டார்கள்.சாலையோரங்களில் விரவிகிடந்த புற்கள் எங்கள் கைகளில் சிக்கி கினிபிக்களின் வயிற்றில் சின்னாபிணமாகியது.கினிபிக்கள் கொறிக்கும் வகையைச் சார்ந்தவை.இவை முதன்முதலில் பெரு மற்றும் பொலிவியாவின் தெற்குப் பழங்குடியினரால் வீட்டுப் பிராணியாக வளர்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சி,இன்று பலரின் செல்லப்பிராணியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.நன்கு வளர்ச்சிப் பெற்ற ஒரு கினிபிக்கின் எடை 700 கிராம் முதல் 1200கிலோ கிராம் வரை இருக்கும். சராசரியாக இவை 4 முதல் 5 ஆண்டு காலங்கள் வரை உயிர் வாழ்கின்றன. 



 
இயல்பாகவே கினிபிக்கள் சாதுவானவை; துணிவற்றவை.வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாலும் தப்பிச் செல்ல முயற்சிக்காதவை.ஆகவே கூண்டிற்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை.இருப்பினும் பூனை,நாய் போன்றவற்றின் பிடியில் அகப்படாமல் இருக்குமாறு அமைக்க வேண்டும்.ஆரம்ப காலத்தில் நான் ஒரு சாதாரண அட்டைப்பெட்டியிலே வளர்த்தேன்.அட்டைப் பெட்டியின் தளப்பகுதியில் 2செ.மீ அளவிற்கு ரம்பத்தூள் எனப்படும் மரத்துருவல்களை போடலாம்.இவை கினிபிக்களின் சிறுநீரை உறிஞ்சும்.ஆனால் இப்படி மரத்தூளை சுத்தம் செய்து சுத்தம் செய்து மாற்றுவது சற்று சிரமமானதாக இருந்ததால்  ஒரு பெரிய கூண்டை வாங்குவது நல்லது என்று தோன்றியது.நானும் நண்பரும் தெரு முனையில் இருந்த ஒருவன் பெட் ஷாப் சென்று விசாரித்தோம்.தம்பிக்காக இரண்டாயிரத்து ஐநூறு என்றான்.சரிதான் போடா என்று நடையை கட்டினோம்.பிறகொரு கடைக்கு சென்றோம்.சரிப்படவில்லை.மனம் தளராமல் அடுத்து ஒரு கடைக்கு சென்றோம்.ம்ஹூம்,நாங்கள் எதிர்பார்த்த விலை அமையவில்லை.அப்படி என்ன விலை தான் எதிர்பார்த்தீர்கள் என்று கேட்காதீர்கள்.அது சஸ்பென்ஸ். அன்று ஆகஸ்ட் பதினைந்து.என்ன தினம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.கல்லூரியில் முடிக்க வேண்டிய சமாச்சாரமெல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பினேன்.முந்தைய நாள் திட்டமிட்ட படி கூண்டு தேடி கிளம்பினோம்.இந்த முறை எங்கள் பார்வை பழையவிலை கடைகள் பக்கம் திரும்பியது.தாலுகா ஆபீஸ் அருகே இருக்கும் பழைய விலை கடையில் கிடைக்காத பொருட்களே இல்லை என ஒருவர் சொல்லக் கேட்டு சைக்கிளில் பிடல் போட்டோம்.அங்கு எத்தனையோ கூண்டுகள் அகப்பட்டன.ஆனால்,எல்லாமே பேரீச்சம்பழத்திற்கு கிடைக்கும் பயனற்ற கூண்டுகள்.முடிவாக,பிராய்லர் கோழிகள் வளர்க்க உபயோகமாகும் கூண்டு ஒன்று நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கிடைத்தது.இப்பொழுது கொஞ்சம் திருப்தியாக இருந்தது.கினிபிக்களின் நடத்தை சிலசமயம் வியப்பை உண்டாக்கும்.கினிபிக் சிறுநீர் கழிக்கும் போது தன்னுடைய உடலின் அடிப்பகுதியை சிறுநீரில் நனைத்து,அதனை தரையெங்கும் தேய்த்து எல்லையை பரப்பிடும்.கோபமாக இருக்கும் சமயங்களில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும்.அதிர்ச்சி அடையும் சமயத்தில் அசைவின்றி நிற்கும்.கினிபிக்களை வளர்க்கும் போது அவற்றை ஜோடியாகவோ அல்லது குழுக்களாகவோ வளர்க்க வேண்டும்.தனியாக வளரும் கினிபிக் ஆனது மனஅழுத்தத்தால் மரணத்தை கூட சந்திக்கும் வாய்ப்புள்ளது.இதன் காரணமாகவே ஸ்வீடன் நாட்டில் கினிபிக்களை ஜோடியின்றி ஒற்றையாக விற்பது சட்டப்படி குற்றமாகும்.




  உணவு விஷயங்களைப் பொறுத்தவரையில்இதர பாலூட்டிகளைப் போல் கினிபிக்களால் தங்களுக்குத் தேவையான விட்டமின் சி யை உற்பத்தி செய்ய இயலாது. இவற்றை உணவிலிருந்தே அவை பெற வேண்டும். விட்டமின் சி குறைபாட்டினால் கினிபிக்கள் "சொறிகரப்பான்" எனும் நோய்க்கு ஆளாகிறது.ஒரு சமயம் என்னுடைய கினிபிக் போரிஷ் (நண்பன் ஒருவன் அதற்கு இட்ட பெயர்) எதுவும் சாப்பிடாமல் அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தது.அதன் கண்களில் வெள்ளையாக புரை ஓடியது.பின் அதை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்று ஊசியிட்ட சில மணிநேரம் சுறுசுறுப்பாக இருந்தது.பின் மறுநாள் காலையில் பரிதாபமாக இறந்தே போனது.சில நாட்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன் போரிஷ் சொறிகரப்பான் நோயால் தாக்கப்பட்டிருந்தது என்று.அதன்பின் என் கினிகளுக்கு விட்டமின் சி அதிகம் நிறைந்த உணவையே வழங்கி வந்தேன்.அந்த உணவு முறை இதோ.பொதுவாக கினிபிக்கள் தினமும் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிடுவதற்கு விரும்புவதில்லை.நான் தினமும் காலையில் காலி்ஃப்ளவர் இலையும்,தண்டும் வைப்பேன்.பின் சிறிதுநேரம் கழித்து கோதுமைத்தவிடை தண்ணீரில் கரைத்து இருமுறை வைப்பேன். அடுத்ததாக மதிய உணவை அவைகள் ஹெவியாக எதிர்பார்க்கும்.எனவே மதிய உணவாக கேரட்,மல்லிச்செடி,பீட்ரூட்,கீரை,ஊறவைத்த கம்பு என ஏதேனும் ஒன்றை அதிகமாக வைக்க வேண்டும். பிறகு இரவு உணவாக அருகம்புல்.தினமும் உணவு வைப்பவரை( என்னை)  பார்த்து உணவு வைக்கும் நேரம் வந்தவுடன் விசிலடிக்கும் .தினமும் நான் கல்லூரி விட்டு வந்ததும் கதவை திறக்கும் சப்தம் கேட்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.

  

எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த நேரம்,திடீரென ஒரு நாள் நடு இரவில்"கீச் கீச்" என்று அலறியது.எழுந்து போய் பார்க்கையில் இரத்தரத்தமாக மூன்று குட்டிகளை ஈன்றிருந்தது. காலை எழுந்ததும் ஆர்வமாக குட்டிகளை பார்க்கச் சென்றால் சரியான பேரதிர்ச்சி.மூன்று குட்டிகளின் தலை மட்டுமே கிடந்தது.பின் மீண்டும் இதுபோல் இரண்டு முறை நடந்தது.பின் இணையதளம்,புத்தகம் என அனைத்தையும் அலசிய போதுதான் தெரிந்தது " ஊட்டச்சத்து குறைவாக பிறந்த குட்டிகளை அதன் தாயே உண்டுவிடும்" என்ற தகவல் மேலும் அதிர்ச்சியூட்டியது.இது அவற்றின் அரக்க குணமா அல்லது " ஊட்டச்சத்து குறைபாடுடன் வளர பிள்ளை கஷ்டப்படும்" என நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு தானே சாப்பிடும் தாய்மை குணமா என்று தெரியவில்லை.

                               

          


பிறந்து ஆறு மாதங்களிலே கினிபிக்கள் இனப்பெருக்கத்தி்ற்கு தயாராகிவிடுகின்றன. இதன் கர்ப்ப காலங்கள் 60 முதல் 70 நாட்கள்.இவ்வாறாக மறுபடியும் ஒரு முறை மூன்று குட்டிகள் ஈன்றது.அதில் ஒரு குட்டி மட்டும் நன்கு முழு வளர்ச்சி அடைந்திருந்தது.கினிபிக்கள் பிறக்கும் போதே சிறிதளவு ரோமங்கள் மற்றும் நகங்களுடனே பிறக்கின்றன.பின் அந்தக் குட்டியும் 6 மணிநேரங்களிலே இறந்து போக,என்னுடைய வீட்டில் எல்லாவற்றையும் விற்றுவிடச் சொல்லி வற்புறுத்த வேறு வழியில்லாமல் நானும் விற்றுவிட்டேன்.மனஉளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக வளர்த்த கினிபிக்களை விற்ற பிறகே மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன்.

Comments