டாலர் தேசத்தின் நிறவெறி ஆதிக்கம்

05 June 2020

நேற்று இன்றில்லை.அமெரிக்க கூட்டமைப்பு நாடுகள் என்றொரு தேசம் உருவானதிலிருந்தே அங்கே நிறவெறி இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெறும் 200 வருடங்கள் வரலாற்றை கொண்ட அமெரிக்கா இன்று தன்னிறைவு பெற்ற நாடாக இருப்பதற்கும்,அசுர வளர்ச்சி பெற்றதற்கும் பின்னால் நீக்ரோக்களின் உழைப்பிற்கும் பங்கு இருக்கிறது. 1700களில் அமெரிக்காவெங்கும் வெள்ளை முதலாளிகள் கருப்பினர்களை பண்ணை அடிமைகளாக வைத்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் அமைதியாக காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் மெல்ல தம் பொறுமையை இழக்க ஆரம்பித்தார்கள்.பண்ணை முதலாளிகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.இனிக்க இனிக்க தம் முதலாளிகளை வேரறுக்க முடிவெடுத்தார்கள்.அந்த வருடம் முழுவதும் விதைப்பு நாளிலிருந்து அறுவடை நாள்வரை,வழக்கத்தை விட அதிகமான விளைச்சல் வரும் என்று முதலாளி கணக்கிடும்படி நெருப்பாய் உழைத்தார்கள்.முடிவில் அறுவடை நாளன்று வயலெங்கும் நெருப்பை கொளுத்தி போட்டு தப்பி ஓடினார்கள்.ஒரு பண்ணையில் வேலை பார்க்கும் 100 அடிமைகளின் திட்டம் இது.இது போன்று அமெரிக்காவின் பல மாகாணங்களில் புரட்சி வெடிக்க ஆரம்பித்தது.
கருப்பின அடிமைகளுக்கு நான்கு வழி இருந்தது.சத்தமில்லாமல் போராடுவது, மெல்ல குரல் கொடுப்பது, வழி இருந்தால் தப்பிப்பது,
வாய்ப்பில்லாவிடில் தொடர்ந்து சிரமப்படுவது.கருப்பின அடிமைகளுக்கு அதிகாரம் படைத்த பண்ணை முதலாளிகள் அளித்த காணிக்கைகள் கொஞ்சமல்ல.அவர்கள் நாள் முழுவதும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.அவசியப்பட்டால் இன்னும் சில மணி நேரம் அவர்களுடைய ஓய்வு நேரத்தில் உழைக்க வேண்டும்.உழைக்கும் வர்க்கத்திற்கு இரண்டு கைப்பிடி கொள்ளு மட்டுமே ஒரு நாள் உணவு.இதோடு அடிமைகளை சூதாட்டத்திற்கு பயன்படுத்துவது,திருமண சீராக அடிமைகளை பரிசளிப்பது,தனக்கு இருக்கும் தண்டனைகளை அடிமைகளுக்கு கொடுக்கச் செய்வது,முதலாளிகள் விருப்பப்படும் பொழுதெல்லாம் ஆசைக்கு இணங்குவது என பண்ணை முதலாளிகள் செய்த கொடூரங்கள் ஏராளம்.இதையெல்லாம் பொறுக்க முடியாத கருப்பினர்கள் போரட்டத்தில் குதிக்க ஆரம்பித்தார்கள்.
முதலாளிகளுக்கு இருப்பு கொள்ளவில்லை. " ஒரு அடிமை என்னைப்பார்த்து எகிறுவதா ? அவர்கள் எப்பிடி இப்பிடி யோசிக்கலாம்.
இதற்கெல்லாம் அவர்களுக்கு வாய்ப்பே இல்லை.இருப்பதை தின்றுவிட்டு வேலையை செய்ய வேண்டும் " என கொந்தளித்தார்கள்.
அந்த சமயம் அதிபரானார் லிங்கன்.கருப்பினர்களுக்காக உரிமை சட்டத்தை எடுத்தார்.நாடு முழுவதும் கூச்சல்.கருப்பினர்களை வெள்ளையர்களுக்கு சமமாக கருதுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.தேசம் துண்டானது.உள்நாட்டு கலவரம் வெடித்தது.அது வேறு கதை.அதைப்பேசினால் விரிவாக போய்விடும்.
இப்போது ஜார்ஜ் பிலோய்டுக்கு நடந்தது போல பல சம்பவங்கள் அமெரிக்காவில் இதற்கு முன் நடந்திருக்கிறது.கறுப்பர்களுக்கு சம உரிமை,கல்விவாய்ப்பு,வேலைவாய்ப்பு என்று என்னனென்வோ போராடி பெற்றார்கள்.ஒன்றும் பெரிதாக பலனில்லை.எல்லாம் பெயரளவில் தான் இருந்தது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அப்போது ஒரு சட்டம் இருந்தது. நம்மூர் பேருந்துகளில் ஊனமுற்றோர், முதியோர்களுக்கென்று பேருந்து வாசலிலே இருக்கை வைத்திருப்பார்களே.அதே போன்று கருப்பர்களுக்கும் வாசலில் அல்லது மூலை முடுக்கில் ஒரு இருக்கை.அதை தாண்டி அவர்கள் வேறு எங்கும் உட்கார கூடாது.ரோசா பார்க்ஸ் என்றொரு கருப்பிண பெண் வெள்ளையர்கள் அமரும் இருக்கையில் உட்கார்ந்து விட்டாதால் வெள்ளையர்கள் அதை பெரிய கலாட்டாவாக்கி ரோசா பார்க்ஸ் பேருந்தில் இருந்து இறக்கி போலீசார் கைது செய்தார்கள்.
இந்த விவகாரம் கண்டு அமெரிக்காவே அல்லோகலப்பட்டது.கருப்பினர்கள் ரோசா பார்க்சிற்கு ஆதரவாக கூட்டம் கூட்டமாக போராட்டம்,பேரணி நடத்தினார்கள்.அதன்பின் 381 நாள் பேருந்து புறகணிப்பு போராட்டத்தை மார்டின் லூதர் கிங் தலைமையில் நடத்தி வெற்றி பெற்றார்கள்.இனி பேருந்தில் இட ஒதுக்கீடு செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. யார் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்றது.ஆனால் கருப்பர்கள் கேட்டது இடம் கேட்டது மனத்தில்.கருப்பு நிறத்தாலும்,சுருள் முடியாலும் நாங்கள் உங்களை விட தாழ்ந்தவர்கள் என்று எப்படி முடிவெடுத்தீர்கள் என்றார்கள்.ஒரு வலியை உணர்வது வேறு.அனுபவிப்பது வேறு.வலி தான் அவர்கள் வாழ்வு.போராட்டம் தான் தீர்வென்றால் போராடட்டும்.
The problem of the 20th century is the problem of the colourline என்று எங்கோ படித்தேன்.இத்தனை வளர்ச்சிக்குப் பின்னும் நிறவெறியும்,
பாலினப்பாகுபாடும்
பாலின உணர்வும்,இனவெறியும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.20ம் நூற்றாண்டு என்றில்லை,எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மனிதனை மனிதனாக வகைப்படுத்தாத வரை எல்லாம் தொடரும்

Comments