கபம் - சுபம்

06 April 2020

வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு சென்று நின்றால்,ஆபீஸ் செல்வதற்கு நண்பர்கள் வந்து பிக் அப் செய்து கொள்வார்கள். நேற்று அப்படித்தான் மெயின் ரோட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் நான்கு பேர் ஏதோ குடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் எதார்த்தமாக பார்த்தேன். புரிந்துவிட்டது.இதற்கு மேலும் அங்கு கவனித்தால் என்னையும் குடிக்க சொல்வார்கள் என ஊகித்து வேகமாக நடந்தேன்.அங்கிருந்த ஒருவர் என்னை சத்தமாக அழைத்தார்.பார்ப்பதற்கு ரவுடி போல இருந்தார். முடி தோளை தொட்டுக் கொண்டிருந்தது. இதை கொஞ்சம் குடித்துவிட்டு போ என்றார்.இல்லை எனக்கு நேரமாகிவிட்டது என நடந்து கொண்டே சொன்னேன்." அட வாடா குடிச்சிட்டு போ " என்றார்.அதற்கு மேல் என்னால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. டேபிளில் இரண்டு குடுவை இருந்தது. ஒன்றில் நிலவேம்பு.மற்றொன்றில் கபசுபம். ஏற்கனவே நிலவேம்பை சிறுவயதில் குடிக்கும் படி கட்டாயபடுத்தப்பட்டேன். அதனால் அதன் சுவை தெரியும்.அது வேண்டாம் என்று கபசுபத்தை தேர்ந்தெடுத்தேன்.கப்பில் கால் கப் அளவிற்கு நானே பிடித்துக்கொண்டேன்.

பெரிதாக ஒன்றும் இல்லை.சிறிதளவு சுவைத்தேன்.இதை உன்னால் செய்ய முடியாது என்று மனம் சொல்லியது.பின் மெல்ல மெல்ல முயன்றேன். எங்காவது கீழே ஊற்றும்படி இடம் இருக்கிறதா என பார்த்தேன்.ஒன்றும் அமையவில்லை.அந்த ரவுடி நபர் என்னை பார்த்து " ரொம்ப கஷ்டப்பட்டு குடிக்கிறீங்க போல " என்றார்.போடா முட்டாள் என்று அவன் முகரையிலேயே ஊற்ற வேண்டும் போல் இருந்தது. ஊற்றவில்லை.அவர் தான் ரவுடி போல இருக்கிறாரே. பின் மிக சிரமப்பட்டு கப்பில் சிறிதளவு குடித்துவிட்டு மீதியை யாரும் கவனிக்காத நேரம் குப்பை தொட்டியில் போட்டு விட்டு யார் முகத்தையும் பார்க்காமல் மெயின்ரோட்டிற்கு வந்துவிட்டேன்.

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.விலை குறைந்த மட்டமான சரக்கின் சுவை மோசமானது என்று எவனாவது சொன்னால் அவனுக்கு செவிள் மேல் இரண்டு அறை விட்டு கபசுப குடிநீரை குடிக்கச் செய்யுங்கள்.


Comments