பால்யத்து கதை 1

24 JULY 2020

அப்போது எனக்கு வயது பதினொன்று.உறவினர் வீட்டில் கிரகப்பிரவேசம் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. என்னை அருகிலிருக்கும் கடைக்கு அனுப்பி மஞ்சள் தூள் மற்றும் இதர பொருள் ( நினைவில் இல்லை) வாங்கிவரச் சொன்னார்கள். எல்லாம் வாங்கி வந்தபின் மற்றுமொரு உறவினர் முக்கியமான பொருளை மறந்துவிட்டதாகவும் அதை உடனே சென்று வாங்கி வரவும் சொன்னார்.
பழைய உடைந்து போன பிளாஸ்டிக் கோப்பை ஒன்றை என்னிடம் கொடுத்தார்.அவர் வாங்கி வர சொன்ன பொருளை அப்போது நான் கேள்விபட்டிருக்கவில்லை.மேலும் அதற்கு பணமும் கொடுக்கவில்லை.
உறவினர் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு சென்று நான் சொன்னதாக சென்று வாங்கி வா என்றார்.
அவர் சொன்ன இடம் எனக்கு பரிச்சயம் தான்.ஆனால் அந்த இடத்தின் உள்ளே சென்றது இல்லை.இன்று வரை.
வாசலில் நின்றபடி சத்தம் விட்டேன்.ஒரு வயதான பெண்மணி வந்தார்.மாமா உடனடியாக வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்லி கையிலிருந்த கோப்பையை அப்பெண்ணிடம் கொடுத்தேன்.இரண்டு நிமிடத்தில் அந்த கோப்பையின் பாதியளவை நிரப்பிக்கொண்டு வந்து கொடுத்தார்.அவசரம் என்று சொன்னதால் என்னவென்று ஆராயவும் தோன்றவில்லை.வீட்டை நோக்கி விரையும் போது தான் கவனித்தேன்.அந்த கோப்பையின் சிறு துளை வழியாக அதிலிருந்த திரவம் சிந்திக்கொண்டிருந்தது.ஏற்கனவே பாதியளவில் இருக்கிறது;மேலும் வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கோப்பையின் துளையில் உள்ளங்கையை வைத்து அடைத்தபடி சென்றேன்.திரவம் முழுவதும் என் கையிலிருந்து பரவி பயணமாகி சட்டையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.
எதிரில் வந்த தெரிந்த ஆள் ஒருவர் விவரத்தை கேட்டறிந்தார்.வாய்விட்டு சத்தமாக சிரித்துவிட்டு விரைவில் வீடு போய்ச் சேரும்படி சொன்னார்.இதில் சிரிக்க என்ன இருக்கிறது என எனக்கு புரியவில்லை.மீண்டும் ஒரு ஆள் வந்து விவரம் கேட்டு சிரித்தார். முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு மேலும் திரவம் சிந்தாமால் துளையை அடைத்தபடி பாதுகாப்பாக வந்து சேர்ந்தேன்.வீட்டிற்கு வந்தபின் நடந்ததை மாமாவிடம் சொன்னேன்.அவரும் சிரித்தார்.பின் அவர் ஒரு உண்மையை சொன்னார்.அப்போது நான் தான் முட்டாள் என்பதை புரிந்துகொண்டேன்.
மாமா சொன்ன உண்மை : அவர் வாங்கிவரச் செய்தது கோமியம் என்றழைப்படும் மாட்டு மூத்திரம்.

Comments