பொருளின் அவசியம்

 16 January 2020

 வழிப்பறி பற்றி இதுவரை கேள்விபட்டிருக்கிறேன்.சில சுவாரஸ்யம். சில சலிப்பு. முதல் முறையாக வழிப்பறியை எதிர்கொண்டிருக்கிறேன்.

இது தில் மேன் திக் திக்.

நானும்,நண்பரும் நுங்கம்பாக்கம் சுதந்திர பூங்காவில் ஓய்வு நேரங்களில் சென்று அமர்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு இதே போல் டீ சாப்பிட்டுவிட்டு அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பெரிய அளவில் வெளிச்சம் இல்லையென்றாலும் தேவையான அளவு இருந்தது. பூங்காவின் கடைசி வலது மூலையில் மாஸ்டர் உதவியுடன் சிலம்பம் மற்றும் அந்தர் பல்டி  பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வட்டமாக கல் பதிக்கப்பட்ட நடைபோதை மேல் பத்து பேர் எடை குறைப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். அந்த நடைபாதை ஒட்டியபடி இருந்த ஒரு இருக்கையில் நானும் நண்பரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒளி விளக்கின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்ததால் எங்கள் மேல் நல்ல வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது.  பொங்கலைப் பற்றியோ,ஊருக்கு செல்வது பற்றியோ எதோ ஒன்றை பேசிக்கொண்டிருந்தோம்.


திடீரென்று இரண்டு நபர்கள் முன் வந்து நின்றார்கள்.இருவரும் என் வயது ஒத்தவர்களாக இருந்தார்கள். ஒருவன் வாரி சீவிய முடி.பச்சை சட்டை அணிந்திருந்தான். இன்னொருவன் சுருள் முடி. முகம் வட்டமாக இருந்தது. வெள்ளை சட்டையில் நீலபுள்ளிகள்.அவர்களின் நடையில் ஒரு நிலைப்புத் தன்மை இல்லை. குடித்திருப்பது போல தெரிந்தது.


" எங்க இர்ந்து வர ? '' வெள்ளை சட்டை கேட்டான்.


" இங்க தான் " என நான் இடது கையை நீட்டி ரூம் இருக்கும் திசையை காட்டினேன்.


பச்சை சட்டை நான் காட்டிய திசையை பார்த்துவிட்டு " இங்க தான்னா இங்கயா "  என பூங்காவை மூலையை காண்பித்து சிரித்தான்.


நான் என்ன சொல்வது என தெரியாமல் மிகவும் கஞ்சமாக சிரித்துக்கொண்டு

 " லேக் வியூ " என்றேன்.


" சரி காசு எவ்ளோ வச்சிருக்க ? " என்றனர் இருவரும்.

நான் எதுவும் சொல்வதற்கு முன்பாக  " நண்பர் காசுலாம் இல்லை "என்றார்.

" ஒன்னுமில்லை.இருக்க காச குடுத்துரு.சரக்கு அடிக்க வந்தோம் சைட் டிஷ் வாங்க காசு இல்ல"  என்றான் பச்சை சட்டை.


" நம்பலன்னா இங்க பாரு "என்று மற்றொருவன் தன் சட்டையை தூக்கி காண்பித்தான்.அவன் இடுப்பில் ஏதோ ஒரு சரக்கை சொருகி வைத்திருந்தான்.அது நழுவி கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தது.


நீயா குடுத்துட்டா ஒன்னும் ப்ரச்சன ஆகாது என பச்சை சட்டை இந்த முறை சட்டையை தூக்கி காட்டினான்.


" பொருள் இருக்கு.பாத்துக்க " என்றபடி தன் முதுகு பக்கத்தை காட்டி சட்டையை லேசாக தூக்கினான்.


அவனது பின் பகுதி இடுப்பில் கத்தி கைப்பிடி தெரிந்தது. பழுப்பு நிற கைப்பிடி.கத்தியின் உலோகபகுதி என் கண்களுக்கு தென்படவில்லை. அதற்குள்ளாக சட்டையை இறக்கி எங்களை நோக்கி விறைப்பாக நின்றான்.

என் கையில் காசு எதுவும் இல்லை. நண்பர் தனது பாக்கெட்டிற்குள் கை விட்டு பார்த்தார். எப்போதோ வைத்த ஐந்து ரூபாய் நோட்டு சற்று மோசமான நிலையில் இருந்தது. ஐந்து ரூபாயை கொடுத்தால் கத்தி குத்து விழும் என்று நினைத்தாரோ என்னவோ மற்றொரு பாக்கெட்டிலும் கை விட்டுப்பார்த்தார். பத்து ரூபாய் ஒன்று தென்படவே அதையும் எடுத்து பதினைந்து ரூபாய் இருக்கு என்றபடி அவர்களிடம் கொடுத்தார். நல்லவேளையாக நாங்கள் கைவசம் அதிகபடியான பணம் எதையும் வைத்திருக்கவில்லை.


"எதுவும் தப்பா எடுத்துக்காத. சைட் டிஷ் வாங்க காசு இல்ல அதான் கேட்டோம் " என்று கனிவாக சொன்னபடி என் தோளில் கை வைத்தான் வெள்ளைசட்டைக்காரன்.


நான் இதற்கு மேல் என்ன சொல்வது எனத்  தெரியாமல் "பரவாயில்ல விடுங்க "என்றேன். பின் அவர்கள் இருவரும் இரண்டொரு நிமிடத்தில் பூங்காவில் இருந்து தொலைந்து போனார்கள்.


எனக்கு வெறுப்பாகியது. பத்து அடி தூரத்தில் தான் அந்த சிலம்ப மாணவர்கள் மற்றும் மாஸ்டர்கள் இருந்தார்கள். எழுந்து அங்கே ஓடியிருக்கலாம். இருந்தும் கத்தியை பார்த்ததும் மூளை வேலை செய்யவில்லை. எங்கிருந்து இப்படி கத்தி தூக்க பழகுகிறார்கள்.


உண்மையில் இல்லாமை தான் திருட்டை உருவாக்குகிறதா ? 

வெறும் பத்து ரூபாய் காரசேவு பாக்கெட்டிற்காக கத்தி தூக்கும் குணம் இவர்களுக்கு ஏன் வருகிறது. இங்கே நடந்த ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் எங்களிடம் கத்தி காட்டிக்கொண்டிருக்கும் போது  அத்தனை நேரம் எடை குறைப்பிற்கு ஓடிய ஒருவர் கூட வரவில்லை. இரண்டு நிமிடத்திற்கு உலகமே நின்றுவிட்டது போல அங்கிருந்த ஒருவர் கூட எங்களை சீண்டவில்லை. உண்மையில் இது யார் கண்ணிலும் படவில்லையா ? அல்லது அந்த பூங்காவில் இது தினசரி நடப்பது தான் என யாரும் கண்டுகொள்ளவில்லையா எனத் தெரியவில்லை.


இத்தனைக்கு பின்னும் நண்பர்  " இனி பாதுகாப்பு கருதி நாம் தான் பொருளோடு திரிய வேண்டும் போல " என்றார்.


Comments