In the Mood for Love
நண்பர் ஒருவரின் பரிந்துரைப்படி,வோங் கர்- வாயின் In the Mood For Love திரைப்படம் பார்த்தேன்.பறவையின் மென்மையான சிறகுகளை கொண்டு முதுகு தடவிக்கொடுப்பது போன்று அதிக சப்தம் இல்லாத,சண்டை சச்சரவுகள் இல்லாத காதல் படம்.இரண்டு அண்டைவீட்டு தம்பதிகளுக்கு இடையில் ஏற்படும் நேசத்தை பற்றி படம் நீள்கிறது. 1962இல் ஹாங் காங்கில் நடந்ததாக படம் சித்திகரிக்கப்படுகிறது. சோ ஒரு பத்திரிக்கையாளர்.சூ கப்பல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சோவின் மனைவியும்,சூவின் கணவரும் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு பயணம் செல்கிறார்கள்.இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக சோ மற்றும் சூ பேசுகையில் வெளிப்படுகிறது.தங்களது துணைவர்கள் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்வதால்,இருவர் மணவாழ்க்கையும் வெறுமையாகவே செல்கிறது.சூ மற்றும் சோ தங்களை அறிமுகம் செய்துகொண்டு பழகத் தொடங்குகிறார்கள்.
அதன் பின் சூ மற்றும் சோ இருவருக்கும்
பிடித்துப்போகிறது. இருவரும் ஒரே மனநிலையில் இருப்பதால் ஒருவரை ஒருவர் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. சோ பத்திரிக்கைக்காக கதை ஒன்றை எழுதுகிறார்.அதற்கு தனக்கு உதவும்படி சோ, சூவை கேட்டுக்கொள்கிறார்.சூ தனது குடியிருப்பில் இருக்கும் அண்டைவீட்டாரின் பேசுபொருளுக்கு ஆளாகிறார்.சூவின் தர்மசங்கடத்தை போக்க ஹோட்டல் ஒன்றில் சோ தனி அறை ஒன்றை வாடகைக்கு எடுக்கிறார்.சூ அலுவலகம் முடிந்த பின்பு தினமும் அங்கு சென்று சோவிற்கு உதவுகிறார்.பின் அவர்களுக்கிடையில் மனநெருக்கம் ஏற்படுகிறது.இருவரும் தங்களது மண வாழ்க்கையை பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள்.திருமணத்திற்கு பின் 'தான்' என்ற சுயத்தை இழந்து விட்டதாக சூ உணர்கிறார்.
திரைப்படத்திற்கு செல்வது போன்ற நிறைய பழக்கவழக்கங்கள் தனது திருமண வாழ்க்கைக்கு பின் தொலைந்து விட்டதாக சோ சொல்கிறார். திருமண வாழ்க்கை இவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று தான் உணரவில்லை என்கிறார் சோ. திருமணத்திற்கு முன்பு தனக்கென்று மேற்கொள்ளும் எதுவும் திருமணத்தின் பின்பு போதுமானதாக இருக்காது. எந்தவொரு காரியமும் இரண்டு ஜீவன்களுக்கு இடைப்பட்டது என்கிறார் சூ. ஒரு வேளை தனக்கு திருமணம் நடைபெறாமல் இருந்திருந்தால் தன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று தான் அவ்வப்போது சிந்திப்பதாக சோ சொல்லும் போது, மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று சூ பதலளிக்கிறார். இருவர் மண வாழ்க்கையிலும் விசுவாசமற்ற துணைவர்களால் வெற்றிடமே பரந்திருக்கிறது. பிற்பாடு,சோ சிங்கப்பூர் செல்கையில் இருவரும் பிரியவேண்டிய நேரம் வருகிறது.சூ சோவின் தோளில் சாய்ந்து அழுவதாய் ஒரு கற்பனைக்காட்சி வருகிறது. சோ அத்தனை ஆறுதல்படுத்தியும் சூ மேலும் அழுதபடி சோவை அனைத்துக்கொள்கிறார். நண்பர் சதீஷ்குமாரின் '' அழுவதற்கு காரணமான அதே கைகள் துடைக்கும் போது அப்படி பெருகுகிறது கண்ணீர் என்ற கவிதை வரிகள் நினைவிற்கு வருகிறது. பின் சிறு சிறு தடங்கல்களால் அவர்கள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு தவறுகிறது. ஒருவேளை இருவரும் சந்தித்து சேர்ந்திருந்தால் சினிமாத்தனமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. சந்திக்காமல் பிரிவுடன் திரைப்படம் முடிகையில் வெகு இயல்பாய் இருக்கிறது.
படம் மிக சாந்தமாக செல்வதால் படத்தின் சிறு சிறு சப்தம் கூட கவனிக்க வைக்கிறது. நடிகர்கள் நடக்கையில் கேட்கும் செருப்பு சப்தம் முதல் உணவகத்தில் ஸ்பூனை மேஜையில் வைக்கும் போது ஏற்படும் ஓசை வரை தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கு கொடுக்கப்பட்டிருந்த அதே முக்கியத்துவம் ஒளி மற்றும் இசைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் அத்தனை வண்ணமயமாக காட்டியிருக்கிறார்கள். சிறு சிறு காட்சிகளின் கோணத்தை கூட மிக நேர்த்தியான முறையில் படம்பிடித்திருக்கிறார்கள். படத்தின் முக்கிய ஆன்மா இசை தான். ஆரம்பத்தில் சூ மற்றும் சோ மிக நாசூக்காக சந்திக்கும் காட்சிகளில் யூமெஜிஸ் வயலின் தீம் இசைக்கிறது. அதன் ஆதாரம் ஏக்கம்.இசையில் இருவரின் ஏக்கங்களும் தனிமையும் சப்தமாக ரீங்கரிக்கிறது.அதுவே படத்தின் ஆன்மாவை சுமந்து செல்கிறது.காலம் ஓடுகிறது.
முடிவில் " அவன் எல்லாவற்றையும் நினைவு கொள்கிறான்.அவன் கடந்தகாலம் முன்னே வருகிறது.அது தூசிபடிந்த கண்ணாடி ஜன்னலை போன்று தெளிவற்றதாக,கலங்கலாக இருக்கின்றது " என்ற வாசகத்தோடு படம் நிறைவுகிறது. நினைவுகள் தெளிவற்று போனாலும் நினைவற்று போவதற்கில்லை என்ற எண்ணம்.





Comments
Post a Comment