ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பாரா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ?

உட்கட்சி பூசல்களால் அரசியல் களத்தில் வலுவிழந்துக் கொண்டிருக்கும் அதிமுகவின் முக்கிய சிக்கலாக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 10 வருடமாக அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளாராக இருந்துவந்த இபிஎஸ், கட்சியின் உயர்ந்த பதவியான இணை ஒருங்கிணைப்பாளரும் கூட. ஆனாலும் தன் மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுத்தர மறுத்து தனி ஆளாக வேட்புமனு தாக்கல் செய்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இப்போது ஒரு பல்டி. மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து தனக்கு நெருக்கமான இளங்கோவனை அந்த அரியணையில் ஏற்றியிருக்கிறார் கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் என்று புகழப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி.



அதிமுகவில் மாவட்டச் செயலாளர் என்பது அதிமுகவிற்குள் அமைச்சர்களுக்கு இணையான பதவியாக கருதப்படுவதோடு, அப்பகுதியில் யார்  எம்.எல்.ஏ., எம்.பி. வேட்பாளர்கள் என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு இருக்கிறது. அப்பகுதி கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும்,

கட்சியில் பலத்தை வலிமைப்படுத்தவும் ஆயுதமாக பயன்படுகிறது மாவட்டச் செயலாளர் பதவி.  சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக 10 ஆண்டுகளாக இருந்தவர் இபிஎஸ். அவரது தலைமையில் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சேலம் புறநகரை கோட்டை விட்டிருக்கிறது அதிமுக. சட்டப்பேரவை தேர்தலில் அங்கங்கு சிதறிய அதிமுக ஓட்டுகள், கோவையில் மட்டும் ஒன்றுசேர்ந்தது. ஆனால், குறிப்பிட்ட தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறவில்லையென்றால், அவரை பதவியில் இருந்து கீழ் இறக்குவதுதான் பெரும்பாலான கட்சிகளின் மரபாக இருக்கிறது. இதனடிப்படையில் அதிமுகவிலும் அங்கங்கு மாவட்டச் செயலாளர்களுக்கு செக் வைத்த தலைமை, எடப்பாடியின் பிடிவாதத்திற்கு மட்டும் ஓகே சொன்னது அதன் அதிகாரப் போக்கையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் அசாத்திய பலம்மிக்க திராவிட கட்சிகளில் ஒன்றாய் இருந்த அதிமுகவிற்கு எடப்பாடி ஆக்கிரமிக்க நினைக்கும் மேற்கு மண்டலம் எடப்பாடிக்கு மட்டுமல்ல, அதிமுகவிற்கும்தான் தேவையாக இருக்கிறது. மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி என தொடர் தோல்விகளை சந்தித்துள்ள அதிமுகவிற்கு இப்போது ஒற்றை நம்பிக்கையாய் இருப்பது மேற்கு மண்டலம்தான். சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒற்றைத் தலைமை என்ற கோஷம் ஒபிஎஸ்ஸையும், இபிஎஸ்ஸையும் நெருக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில்தான், தன் ஆதரவு வேட்பாளர்களை உட்கட்சி தேர்தலில் நிறுத்தி கட்சிக்குள்ளாவது தன் செல்வாக்கை நிலைக்கவைக்க முயன்றிருக்கிறார் எடப்பாடி. 


அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தேனி மாவட்டத்தில் தீர்மானம் இயற்றும் அளவிற்கு சென்ற போது, தன் எல்லைக்குள் எந்த வகையிலும் சசிகலாவின் பெயர் கூட நுழைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறார் இபிஎஸ். ஜெயலலிதா மறைவிற்குப்பின் பல அரசியல் மாற்றங்களை சந்தித்தது தமிழ்நாடு. நிர்வாகமும், ஆட்சியும் தடுமாறிய வேளையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. மறுபுறம் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஓய்வெடுக்க செல்லும் கொடநாடு பங்களாவில் விவாதங்களை கிளப்பிய கொலைகளும், கொள்ளையும் நடந்தன. இதற்கிடையே சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி தங்களை தலைமையாக அறிவித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பிடியாக ஆட்சியிலும், கட்சி நிர்வாகத்திலும் கீரிடம் சூட்டிக் கொண்டனர் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸூம். இப்போது சிறையில் இருந்து வெளியேவந்த சசிகலா கட்சியை கைப்பற்றும் முயற்சியில் தொண்டர்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றிருப்பது இபிஎஸ்-க்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. 

இதனால், சசிகலாவின் தாக்கம் தன் கோட்டையை தகர்த்துவிடக் கூடாது என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார் இபிஎஸ். 


கட்சியை சீரமைக்காமல் தன்னுடைய நிலப்பரப்பில் மட்டும் குறுகிய மனப்பான்மையோடு இபிஎஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்வேளையில், ஆளுங்கட்சியான திமுக அடுத்த மக்களவை தேர்தலுக்கு தன் கூர்வாளை தீட்டிக் கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் திரண்டு நிற்கும் அணியில் பேன் இந்தியா லீடராக மாறியிருக்கிறார் ஸ்டாலின். ஜெயலலிதா இருந்தவரையில் அதிமுகவும் பேன் இந்தியா கட்சியாகவே இருந்தது என்பதில் எந்த சந்தேகமில்லை. ஆனால், ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அவரது குரல் சட்டப்பேரவையிலும், மக்கள் மனதிலும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால், இப்போதைய அதிமுக தெற்கில் ஒரு சமுதாய வாக்கையும், மேற்கில் ஒரு சமுதாய வாக்கையும் பெறுவதற்காக தீவிரம் காட்டி வருவது அதிமுகவை சாதிக்கட்சியாக சுருங்கிவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வெளியிடும் அறிக்கைகள் ஜனநாயகத்திற்கான போதியதாக இல்லை. தமிழ்நாட்டை திராவிட கட்சிகள்தான் ஆளும் என்ற குரல் அதிமுகவிற்குள் எழுந்திருப்பது பாஜகவின் வளர்ச்சியை கண்டு அதிமுக அஞ்சுகிறது என்பதால்தான் என்று வெளிப்படையாக தெரிகிறது. அண்ணாமலையின் வருகைக்குப் பின்பு பாஜகவின் எதிர்க்கட்சி அரசியல் தமிழ்நாட்டில் வேகம் எடுத்திருப்பது அதிமுகவை நிலைகுழையச் செய்தாலும் அதிமுக உட்கட்சி பிரச்சனைகளிலே தீவிரம் காட்டி வருகிறது. சட்டப்பேரவையிலும், அறிக்கையிலும் எடப்பாடி எழுப்பும் குரல் மட்டும் அதிமுகவை மீட்கும் கருவியாக இருக்கப் போவதில்லை. முதலமைச்சராக இருந்தபோது, மக்களுக்காக நிற்பேன் என்று சொன்ன எடப்பாடி இப்போது எங்கே என்பதுதான் அதிமுக தொண்டர்கள் உட்பட, அதிமுகவிற்கு வாக்களிக்க மக்களின் கேள்வி. அறிக்கைகளையும், திமுகவின் கட்சி அரசியலை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், மாநில பிரச்சனைகளிலாவது எடப்பாடி ஆக்கப்பூர்வமாக செயல்படாவிட்டால் அதிமுக இயக்கம், அதன் தொண்டர்கள் விரும்பும் திராவிட கட்சியாக மீண்டெழும். ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற அண்ணாவின் கூற்றை எடுத்துரைத்த ஜெயலலிதாவைப் பின்பற்றியாவது கட்சி அரசியலை நிர்வாகிகள் கையில் கொடுத்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பணியாற்ற வாருங்கள் எடப்பாடி. ஜனநாயகம் உங்கள் பாதையாக இருக்கட்டும். 





Comments